120 ஆண்டுக்குப் பின் ஒரே நேரத்தில் 2 புயல்

120 ஆண்டுக்குப் பின் ஒரே நேரத்தில் 2 புயல்

2 mins read

சென்னை: அரபிக்கடலில் 120 ஆண்டுகளில் இல்லாதபடி ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் மையம் கொண்டு சுழல்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. என்றாலும் தமிழ்நாட்டுக்குப் பேரிடர் பாதிப்பு எதுவும் இராது என்று அது குறிப் பிடப்பட்டுள்ளது.

அவற்றில் கியார் என்ற புயல் அக்டோபர் மாதம் 25ஆம் தேதி மகாராஷ்டிராவுக்கு 350 கி.மீட்டருக்கு மேற்கே உருவாகி ஓமான் நோக்கிச் சென்று சாதாரண புயலாக வலுவிழந்துவிட்டது.

மகா என்ற மற்றொரு புயல் அரபிக்கடலில் உருவாகி தீவிரமடைந்து இருப்பதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக அது மாறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.

இருந்தாலும் இந்த இரண்டு புயல்கள் காரணமாக தமிழ்நாட்டில் பேரிடர் அளவுக்குப் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மகா புயல் காரணமாக தென் தமிழகத்தில் பேய்மழை பெய்யக்கூடும் என்றும் அந்த நிலையம் அறிவித்து உள்ளது.

அரபிக்கடலில் கன்னியாகுமரி அருகே உருவான மகா புயல், வடமேற்குத் திசையில் மணிக்கு 17 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் புயல் காரணமாக தென் தமிழ்நாட்டில் கனமழையும் கடலோர பகுதிகளில் 115 கி.மீட்டர் வரையிலான காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் ஆய்வு நிலையம் அறிவுரை கூறியது.

2007ல் அரபிக்கடலில் கோனு என்ற புயல் உருவானது. அதற்குப் பிறகு 12 ஆண்டுகள் கழித்து இப்போது மகா புயல் உருவாகி இருக்கிறது.

இந்தப் புயல் நவம்பர் 4ஆம் தேதி மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும் முன்னுரைக்கப்பட்டு உள்ளது. அரபிக்கடலில் 120 ஆண்டுகால வரலாற்றில் இதுவரையில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் இப்போதுதான் உருவாகி இருப்பதாகவும் ஆய்வு நிலையம் ஆராய்ந்து கூறி உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில ஆண்டுகளைவிட இந்த ஆண்டில் அதிகமாக பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பிவிட்டன.

பல மாவட்டங்களில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எந்த நேரத்திலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறப்பட்டு இருக்கிறது.

வெள்ளம் காரணமாக பேரிடர் ஏதேனும் ஏற்பட்டால் அதைச் சமாளிக்க எல்லாம் ஆயத்தநிலையில் இருப்பதாக அரசாங்கம் ஏற்கெனவே தெரிவித்து உள்ளது.

மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.