போலிஸ் நிலையங்களுக்கே போய் கைவரிசை காட்டிய போலி போலிஸ்: சீருடையுடன் சிக்கினார்

போலிஸ் நிலையங்களுக்கே போய் கைவரிசை காட்டிய போலி போலிஸ்: சீருடையுடன் சிக்கினார்

1 mins read
fdcfb68d-181d-4cf3-ad9a-43689c295189
-

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு போலிஸ் நிலையங்களுக்கும் போலிஸ் உடையில் சென்று தான் ஒரு பெண் போலிஸ் என்று சொல்லி பல்வேறு சலுகைகளைப் பெற்று வந்த சூரியப்பிரியா, 27, என்ற ஒரு பெண் கடைசியில் பிடிபட்டார்.

சிதம்பரம் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜதுரை என்பவரது மனைவியான சூரியப்பிரியா, தன்னை பெண் போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறிக்கொண்டு பல்வேறு போலிஸ் நிலையங்களில் கைவரிசை காட்டி இருக்கிறார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளன.

சூரியப்பிரியா போலியான போலிஸ் என்பதைக் கண்டுகொண்ட சிதம்பரம் நகர கிராம நிர்வாக அதிகாரி அசன்கபார் என்பவர், சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறிக்கொண்டு சூரியப்பிரியா தன்னிடம் சான்றிதழ் கேட்டதாக சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ரகசியமாக புகார் தெரிவித்தார்.

அதையடுத்து, சீருடையுடன் சிதம்பரத்தில் திரிந்துகொண்டு இருந்த சூரியப்பிரியாவை போலிஸ் கைது செய்தது. இந்த மோசடி தொடர்பில் சூரியப்பிரியாவின் கணவர் ராஜதுரை என்பவரும் சக்கரபாணி என்பவரும் பிடிபட்டனர். சூரியப்பிரியா மீது போலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சூரியப்பிரியா போலிஸ் உடையுடன் பல போலிஸ் நிலையங்களுக்கும் சென்று பல வழக்கு விசாரணைகளில் போலிசாரிடம் உதவி கேட்டுள்ளார் என்றும் பொது மக்களிடத்திலும் அவர் கைவரிசை காட்டி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. விசாரணை நடக்கிறது.