கொல்லிமலை: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள சோமேஸ்வரர் கோயிலில் நடந்த ஒரு திருமணம் பெரும் பரபரப்புடன் பாதியில் நின்றது.
அந்தப் பகுதியில் கூலித்தொழிலாளியான விஜி என்பவர் ராசிபுரம் தாலுகா ஆயில்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கழுத்தில் தாலிகட்ட இருந்தார்.
அந்தத் திருமணம் உறவினர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதால் இரு வீட்டாளர்களும் பெரிய அளவில் கூடியிருந்தார்கள். கெட்டி மேளம் முழங்க மணமேடையில் மணமகள் கழுத்தில் மணமகன் தாலியைக் கட்டி பிறகு வழமைப்படி அந்தப் பெண்ணுக்கு நெற்றியில் மாப்பிள்ளை பொட்டு வைத்தார்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மணமகன் விஜியின் கையைத் தட்டிவிட்ட மணப்பெண், அவருடைய கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டார்.
எல்லாரும் திகைத்து நின்றநிலையில் திருமணத்தை நடத்திவைத்த அர்ச்சகர், அந்தப் பெண்ணிடம் என்ன என்று கேட்டபோது, அந்தப் பெண் அர்ச்சகரையும் சரமாரியாகத் தாக்கினார்.
தாலியைக் கழற்றி வீசிவிட்டு மணமகளும் அங்கிருந்து ஓடிவிட்டார். பெரும் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து எல்லோரையும் வெளியே போகும்படி சொல்லி அர்ச்சகர் கோயில் கதவைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
கோயிலில் இருந்து வெளியேறிய இரு வீட்டாரும் நேரே போலிஸ் நிலையத்துக்குச் சென்றனர். அங்கு விசாரணை நடந்தது. மணப்பெண்ணுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் அவருக்கு இலேசான மனநிலை பாதிப்பு உண்டு என்றும் உறவினர்களில் சிலர் கூறினர்.
பின்னர் அதே முகூர்த்தத்தில் மணமகன் விஜிக்கு அவருடைய உறவினரான வேறு ஒரு பெண்ணை எல்லோரும் சேர்ந்து மணமுடித்து வைத்தனர்.
மாப்பிள்ளையை அறைந்துவிட்டு ஓடிய பெண் அவருடைய வீட்டிற்குச் சென்று கதவை மூடிக் கொண்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.
இதனிடையே, மணமகன் விஜி புதிய பெண்ணை கரம் பிடித்ததைக் கண்டு அவரின் உறவினர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தடபுடலாக விருந்தும் நடந்தது. மணப்பெண் கலாட்டா செய்த திருமணம் அந்தப் பகுதி முழுவதும் ஒரே பரபரப்பாகியது.

