குழந்தையின் உயிரைப் பறித்த பட்டம்; இரண்டு பேர் கைது

குழந்தையின் உயிரைப் பறித்த பட்டம்; இரண்டு பேர் கைது

2 mins read

சென்னை: இருசக்கர வாகனத்தில் தனது பெற்றோருடன் உற்சாகமாக சென்றுகொண்டிருந்த மூன்று வயது குழந்தை அபிநயுவின் கழுத்தில் பட்டம் விட பயன்படுத்தும் மாஞ்சா நூல் சிக்கியதில் குழந்தை உயிரிழந்தது.

நேற்று நடந்த இந்த சம்பவம் தொடர்பில் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த நாகராஜ் என்ற இளைஞரையும் 15 வயது சிறுவனையும் போலிசார் கைது செய்தனர்.

கண்ணாடித் துகள்களை மைபோல் கூழாக்கி, அதில் பசை உட்பட பல பொருட்களையும் சேர்த்து இந்த மாஞ்சா நூல் தயா ரிக்கப்படுகிறது.

இதன் காரணமாக உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இந்த நூலில் பட்டம் வி்டுவதற்கு கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சென்னையில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த தடையையும் மீறி பட்டம் விட்ட இருவரால் சென்னையில் குழந்தை அபிநயு உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபால்.

தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் கோபால், மனைவி சுமித்ரா, மகன் அபிநயுவுடன் கொருக்குப் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் அவர் சென்று கொண்டிருந்தபோது பட்டம் விட பயன்படுத்தும் மாஞ்சா நூல் காற்றில் பறந்து வந்து குழந்தையின் கழுத்தை அறுத்தது.

அப்போது மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் அமர்ந்திருந்த அபிநயுவின் கழுத்தை மாஞ்சா நூல் வெட்டியது. உடனே குழந்தையை ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு கொண்டுசென்றனர்.

குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறியதைக் கேட்டு பெற்றோர் அதிர்ந்தனர்.