சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் சொத்துகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 27.9.2014 அன்று சொத்துக் குவிப்பு வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
ஜெயலலிதா உள்பட 4 பேரின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 5.12.2016 அன்று ஜெயலலிதா மரணம் அடைந்தார்.
இந்த வழக்கில் 14.2.2017 அன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
தீர்ப்பு வழங்கப்பட்ட போது ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால் அவர் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதனால் கர்நாடக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது.
அதில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை யாரிடம் வசூலிப்பது என்று கேட்கப்பட்டது.
இந்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் 28.9.2018ல் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் சொத்துகள் என்னவாகும் என்கிற சூழ்நிலை இருந்ததால் அவரது சொத்துகள் அனைத்தையும் கணக்கெடுக்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங் களுக்கும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ஜெயலலிதாவுக்குச் சொந்தமான சொத்துகள் குறித்த அறிக்கையை விரைவாக அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
இது தொடர்பான விவரங்களைச் சேகரித்து அனுப்பிவைக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வட்டாட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொத்துகள் இருப்பின் அது குறித்த விவரங் களையும் இல்லையென்றால் 'இல்லை' என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.

