சென்னையில் துப்பாக்கிச் சூடு; மாணவர் சுட்டுக் கொலை

சென்னையில் துப்பாக்கிச் சூடு; மாணவர் சுட்டுக் கொலை

1 mins read

சென்னை: சென்னையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தனியார் பலதுறைத் தொழிற்கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வரும் சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த முகேஷ் நேற்று தனது நண்பரான விஜய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

முகேஷ்ஷும் அவரது நண்பர் விஜய்யும் வீட்டுக்குள் பேசிக் கொண்டிருந்ததாகவும் விஜய்யின் சகோதரர் வீட்டிற்கு வெளியே இருந்துள்ளதாகவும் தெரிகிறது.

அந்த சமயத்தில் திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது நெற்றிப் பொட்டில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் முகேஷ் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் விஜய் வீட்டைவிட்டு வெளியே ஒடி தலைமறைவாகி விட்டார்.

முகேஷ் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அங்கு முகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு வந்த போலிசார் துப்பாக்கிச் சூடு குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முகேஷ் துப்பாக்கியால் சுடப்பட்ட வீட்டின் அருகே உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

விஜய்யின் சகோதரர்கள் இருவரை கைது செய்துள்ள தாழம்பூர் போலிசார், தலைமறைவான விஜய்யை தேடி வருகின்றனர்.