மோசடி: வங்கிகளில் அதிரடி சோதனை

மோசடி: வங்கிகளில் அதிரடி சோதனை

1 mins read

சென்னை: இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வங்கிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் ரூ.7,000 கோடி அளவுக்கு மோசடி, முறைகேடு விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகள் திரட்டி வந்த நிலையில் நேற்று நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 169 இடங்களில் அதிரடி சோதனை நடை பெற்றது.

டெல்லி, குஜராத், அரியானா, சண்டிகர், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.

டெல்லியிலிருந்து பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சென்ற சிபிஐ அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களில் செயல்படும் சிபிஐ அதிகாரிகளுடன் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.

வங்கிகளில் பணியாற்றும் முறைகேடுகளில் சிக்கிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாகக் கூறப் படுகிறது.

ஆனால் எந்தெந்த பகுதிகளில் சோதனை நடைபெற்றது என்பது பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் எதையும் சிபிஐ வெளியிடவில்லை.

சென்னையிலும் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் எந்த பகுதியில் யாருடைய வீட்டில் சோதனை நடைபெற்றது என்பது பற்றி தெரியவில்லை.

நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற சோதனை சிபிஐ அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனைகளிலேயே மிகப்பெரிய சோதனை என்று நம்பப்படுகிறது.

வங்கிகளில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக சிபிஐ தரப்பில் பின்னர் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.