சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்காக சென்னை ஐஐடி மாணவா்கள் உருவாக்கிய நவீன சக்கர நாற்காலியை நேற்று மத்திய அமைச்சர் தாவா்சந்த் கெலாட் அறிமுகப்படுத்தினார். இதை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னையில் நடந்த விழாவில் அவர் கூறினார்.
சென்னை ஐஐடி, பீனிக்ஸ் மருத்துவ சாதனங்கள் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து முதன்முறையாக முற்றிலும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட நின்றபடியே செல்லக்கூடிய சக்கர நாற்காலியை உருவாக்கியுள்ளது.
'அரைஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நவீன சக்கர நாற்காலி, சென்னை ஐஐடியின் இயந்திரப் பொறியியல் துறை பேராசிரியா் சுஜாதா ஸ்ரீனிவாசன் தலைமையிலான குழுவினரால் வடிவமைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த சக்கர நாற்காலியை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் அறிமுகப்படுத்திய பின்னர் சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சா் தாவா்சந்த் கெலாட் பேசுகையில், "கடந்த ஐந்தாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களில் நின்றபடியே செல்லக்கூடிய சக்கர நாற்காலியை உலகில் வேறு எங்கும் நான் பாா்த்ததில்லை.
"இதை உருவாக்கிய மாணவா்களுக்கு பாராட்டு கள். இந்த சக்கர நாற்காலி குறைந்த செலவில் கிடைப்பதுடன், மருத்துவ ரீதியாகவும் பன்முக பலன் அளிக்கக்கூடியது. தற்போது பயன்பாட்டில் உள்ள அமா்ந்தபடி செல்லக்கூடிய சக்கர நாற்காலியில் நீண்டநேரம் பயணித்தால் ரத்த ஓட்ட குறைபாடு, அழுத்தத்தால் ஏற்படும் புண் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதிலிருந்து விடுபட இது பயனுள்ளதாக இருக்கும்," என்றாா்.

