கோவை இரட்டைக் கொலை வழக்கில் மனோகரனுக்கு தூக்கு உறுதி

கோயமுத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பத்து வயது சிறுமி முஸ்கான், அவளது 7 வயது சகோதரன் ரித்திக் ஆகியோர் 2010ஆம் ஆண்டு கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மனோகரனுக்கு தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

சிறுமி முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும், சிறுவன் ரித்திக் விஷம் கொடுத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதும் உடற்கூறாய்வில் தெரியவந்ததையடுத்து அதில் சம்பந்தப்பட்ட மோகன்ராஜ், மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
 
பின்னர் மோகன்ராஜ் தப்பிச் செல்ல முற்பட்டபோது போலிசார் சுட்டுக்கொன்றனர். 

மனோகரன் மீதான வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம், தூக்குத் தண்டனை விதித்தது. இதனை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியன உறுதி செய்தன. 

இதையடுத்து, தண்டனையை மறுஆய்வு செய்து தனக்கு ஆயுள்தண்டனை விதிக்க வேண்டுமென மனோகரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவின்மீது, நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் குற்றவாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்டது.