மேயர் பதவிக்கு குறிவைக்கும் கட்சிகளால் திணறும் அதிமுக

மேயர் பதவிக்கு குறிவைக்கும் கட்சிகளால் திணறும் அதிமுக

2 mins read

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து இப்போதே சலசலப்புகள் துவங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இம்முறை இக்கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக, புதிய நீதிக்கட்சி ஆகியவை மேயர் பதவியைக் குறிவைத்துக் காய்களை நகர்த்தி வருவதாகவும், இதை எப்படிச் சமாளிப்பது எனப் புரியாமல் அதிமுக தலைமை கவலையில் மூழ்கி இருப்பதாகவும் தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது.

எனவே அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்தால் மட்டுமே சட்டமன்றத் தேர்தலை நோக்கி நடைபோட முடியும் என பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கருதுகின்றன.

நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட்டணி குறித்த முடிவை மிகத் தாமதமாக எடுத்ததால் அதிமுக கூட்டணியில் தேமுதிகவால் குறைந்த தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடிந்தது.

எனவே இம்முறை முதல் கட்சியாக முந்திக்கொண்டு அதிமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அந்தக் கட்சித் தலைமையிடம் நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதையடுத்து தங்களுக்குக் குறைந்தபட்சம் 2 மேயர் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அதிமுக தலைமையிடம் தேமுதிக வலியுறுத்துவதாகவும், வேலூர், சென்னை மேயர் பதவிகளுக்கு அக்கட்சி குறி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் பாமக தரப்பிலும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கட்சியைப் பலப்படுத்த வேண்டுமென்றால் உள்ளாட்சித் தேர்தலில் அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டுமென நிர்வாகிகள் பலர் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி உள்ளனர்.

இதையடுத்து பாமக முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ள டாக்டர் ராமதாஸ். இரு மேயர் பதவிகளைப் பெறும் வகையில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளதாகத் தகவல்.

இதற்கிடையே வேலூர் மேயர் பதவியைப் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகமும் குறி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபோக, தமாகா, பாஜக தரப்பிலும் சில கோரிக்கைகள் முன்வைக்கப்படலாம் என்றும், அக்கட்சிகளும் மேயர் பதவிக்குக் குறி வைக்கலாம் என்றும் தெரிகிறது.

இதனால் கூட்டணிக் கட்சிகளை எவ்வாறு சமாளிப்பது எனத் தெரியாமல் அதிமுக தலைமை திணறுவதாகத் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இதையடுத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த முதல்வர் பழனிசாமி, உள்ளாட்சித் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அமைக்க முடிவு செய்திருப்பதாக அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.