முதல்வர்: தகவல் தொழில்நுட்ப துறையில் ஆட்குறைப்பு வேண்டாம்

முதல்வர்: தகவல் தொழில்நுட்ப துறையில் ஆட்குறைப்பு வேண்டாம்

2 mins read

சென்னை: தமிழக அரசு முதலீட்டாளர்களை இருகரம் நீட்டி வரவேற்கும் அரசாக உள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில் தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு நாள் அனைத்துலகக் கருத்தரங்கு சென்னையில் நேற்று துவங்கியது. இக்கருத்தரங்கைத் துவக்கி வைத்து உரையாற்றிய முதல்வர், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பைத் தவிர்க்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

சென்னையில் பல்வேறு புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் துவங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகம் அமைதியான மாநிலமாகவும் மனிதவள ஆற்றல் கொண்ட மாநிலமாகவும் இருப்பதே இதற்குக் காரணம் என்றார்.

"ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் பொறியியலாளர்களாக உருவாகிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தொழில்நுட்ப நிறுவனங்கள் உதவும்.

"தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தவிர்த்துவிட்டு வேறு எவ்வாறு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது என்பது குறித்து அனைத்து நிறுவனங்களும் ஆலோசிக்க வேண்டும்," என்றார் முதல்வர் பழனிசாமி.

ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து விரிவாக விவாதித்து, அதன்வழிக் கிடைக்கும் கருத்துகளைத் தமிழக அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் மேலும் பல நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாகக் குறிப்பிட்ட முதல்வர், கடந்தாண்டில் மட்டும் தமிழகத்திற்கு 6,500 கோடி ரூபாய் அளவிலான வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு, பணிநேரக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தனியார் நிறுவனம் ஒன்று 10 ஆயிரம் ஊழியர்களை நீக்கப்போவதாகவும் அண்மையில் அறிவித்துள்ளது.

இத்-த-கைய சூழ்-நி-லை-யில் முதல்-வர் பழ-னி-சாமி இவ்-வாறு வேண்-டு-கோள் விடுத்-துள்-ளார்.