பாளையங்கோட்டை: பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் வெடித்த திடீர் மோதலை அடுத்து பாளையங்கோட்டையில் பரபரப்பு நிலவியது.
முருகன்குறிச்சியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் இரு தினங்களுக்கு முன்னர் சக மாணவரின் பிறந்தநாளை அங்குள்ள திடலில் கேக் வெட்டிக் கொண்டாடி உள்ளனர்.
அப்போது அங்கு வந்த மற்றொரு அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மூன்றாவதாக அங்கு வந்து சேர்ந்த வேறொரு பள்ளியின் மாணவர்களும் இந்த மோதலில் பங்கெடுத்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற போலிசார், மோதலில் ஈடுபட்டவர்கள், கைகளில் சாதிக் குறியீடு தொடர்பான கயிறு கட்டியவர்கள் என 42 மாணவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
மாணவர்களின் எதிர்காலம் கருதி வழக்குப் பதிவு செய்யவில்லை என்றாலும், அவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் நூதன தண்டனை வழங்கினார் காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன்.
அதன்படி, 42 மாணவர்களும் 1,330 திருக்குறள்களையும் எழுத வேண்டும். இதுதான் தண்டனை என்றார் ஆய்வாளர்.
இதையடுத்து மாணவர்கள் அனைவரும் காவல் நிலையம் முன்பு அமர்ந்து திருக்குறள் எழுதினர்.

