மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச லட்டு பிரசாதம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச லட்டு பிரசாதம்

1 mins read
0be9722f-40f8-46e1-850c-00c73683bcea
பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் 30 கிராம் எடையளவில் தயாரிக்கப்படுகிறது. இதற்காக 15 பேர் கொண்ட குழு பணியமர்த்தப்பட்டுள்ளது.  படம்: ஊடகம் -

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தினமும் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் நடவடிக்கை இன்று தொடங்கியது.

அதனைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளிக் காட்சி வழியாகத் தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு லட்டு பிரசாத விநியோகம் தொடங்கியது. இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ உட்பட முக்கிய நபர்கள் கலந்துகொண்டனர்.

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிகலிருந்து மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

லட்டுகளைத் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் வடமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு கோயிலின் தெற்கடிவீதி யானைமகால் அருகே உள்ள இடத்தில் நிறுவப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக லட்டு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. ஒரு மணி நேரத்தில் 3,000 லட்டுகள்வரை தயார் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வருகையைப் பொறுத்து தினமும் 20,000 லட்டுகள்வரை தயாரிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான செலவை கோயில் நிர்வாம் ஏற்றுக்கொள்கிறது.

பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் 30 கிராம் எடையளவில் தயாரிக்கப்படுகிறது. இதற்காக 15 பேர் கொண்ட குழு பணியமர்த்தப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் இலவச லட்டு பிரசாதம் வினியோகம் செய்யப்படுகிறது.