காற்றுத் தூய்மைக்கேடு: டெல்லியை மிஞ்சும் சென்னை; உடனே தடுக்க பாமக வலியுறுத்து

காற்றுத் தூய்மைக்கேடு: டெல்லியை மிஞ்சும் சென்னை; உடனே தடுக்க பாமக வலியுறுத்து

1 mins read

சென்னை: சென்னையில் டெல்லியை மிஞ்சிய காற்றுத் தூய்மைக்கேடு ஏற்பட்டு இருப்பதாகவும் அதைக் கட்டுப்படுத்த உடனே நடவடிக்கை தேவை என்றும் பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

சென்னையில் கடந்த சில நாட்களாக காற்று மாசு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது என்றும் சென்னை மக்களை அவதிப்படுத்தும் காற்று மாசு அதிகரிப்பதற்கான காரணங்கள் எவை என்பது தெளிவாகத் தெரிந்தும், அவை சரி செய்யப்படாதது வருத்தமளிக்கிறது என்றும் நேற்று அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

சென்னையில் காற்று மாசு குறியீடு அதிகபட்சமாக 374 என்ற அளவுக்கு அதிகரித்திருக்கிறது. காற்றில் கலந்துள்ள மாசு துகள்களின் அளவு 50-க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே அது தூய்மையான காற்றாகும்.

டெல்லியில் இந்த அளவு 254 என்ற அளவைத் தாண்டியதால் அங்கு காற்றில் கலந்துள்ள மாசைக் குறைக்க பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டினார்.