4,160 கிராமங்களுக்கு ஆபத்து: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவை: தமிழ்நாட்டில் 4,160 கிராமங்கள் பேரிடர் ஏற்படக்கூடிய ஆபத்தில் இருப்பதாகவும் பாதிப்புகளைத் தவிர்த்துக்கொள்ள ஆற்றல் மிகுந்த குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. 

தமிழகத்தில் 33 மாவட்டங்களில் 86 வருவாய் கோட்டங்களில் 16,682 வருவாய் கிராமங்கள் உள்ளன. 

இவற்றில் புயல், மழை, வெள்ளம், வறட்சி, சூறாவளி ஆபத்துகளை எதிர்நோக்கி இருந்ததாக 4,160 கிராமங்களுக்கு இந்த ஆண்டில் பேரிடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மாநிலத்தில் நீர்த்தேக்கங்களை ஆக்கிரமித்து சுமார் 100,000 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. 

அந்த வீடுகள் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கி உள்ளன. 

நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதிகளில் 20,000 வீடுகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டு உள்ளது.

மாவட்டம் வாரியாக வருவாய்த் துறையில் பேரிடர் மீட்பு மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது என்றாலும் அத்தகைய மையத்தில் தொலைபேசி இணைப்புகூட இல்லை என்று கூறப்படுகிறது. 

பேரிடர் நேரத்தின்போது அத்தகைய மையத்தை நம்புவதில் பலன் இல்லை என்றும் ஆகையால் பேரிடரைச் சமாளிக்க ஆற்றல் மிகுந்த மீட்புக் குழுக்களை மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் உடனடியாக அமைக்க வேண்டும் என்று இந்தத் துறை வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதில் தீயணைப்புத் துறையை மட்டுமே நம்பி வருவாய் துறையினர் இனிமேல் காலம் கடத்த முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இயற்கை பேரிடர்களை அதிகமாக எதிர்நோக்கி இருக்கும் நாகப்பட்டினம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருவாரூர் முதலான மாவட்டங்களில் உடனடியாக நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்று பேரிடர் மீட்புத் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செம்மையான ஆற்றல் மிகுந்த மீட்புக் குழுக்கள் இல்லாமல் பேரிடர்களைச் சமாளிப்பது மிகவும் சிரமம் என அவர்கள் கூறினர்.

குறிப்பாக ஆபத்து இருப்பதாக அடையாளம் காணப்பட்டு உள்ள கிராமங்களில் உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்று அவர்கள் கோரி உள்ளனர்.