தீவிர கம்யூனிஸ்டுகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தவர் கைது

கோவை: தீவிர கம்யூனிஸ்டுகளுக்கு  (மாவோயிஸ்ட்) ஆயுதப் பயிற்சி அளித்துவந்த மிகமுக்கிய பிரமுகர் கைதானார். 

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் என்ற அந்த ஆடவரைத் தமிழக சிறப்பு அதிரடிப்படை போலிஸ் ஆனைகட்டி அருகே சனிக்கிழமை கைது செய்தது. தமிழக-கேரள எல்லையை ஒட்டியுள்ள அகழி, அட்டப்பாடி உள்ளிட்ட வனப் பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இருந்து வருகிறது.

பாலக்காடு மாவட்டம் அட்டப் பாடி அருகே உள்ள மஞ்சக்கண்டி பகுதியில் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி கேரள அதிரடிப் படையினர் தேடுதல் வேட்டையாடினர். அப்போது மாவோயிஸ்டுகளுக்கும் அதிரடிப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. அதில் மாவோயிஸ்டுகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

அடுத்த நாள் நடந்த மோதலில் ஒரு மாவோயிஸ்ட் கதை முடிந்தது. மோதல் நடந்த இடத்தின் அருகே மாவோயிஸ்டுகள் தற்காலிகக் கூடாரம் அமைத்து இருந் தனர். அந்த கூடாரத்தில் இருந்து மருந்து, மாத்திரைகள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 

மோதலின்போது சந்து என்ற தீபக்கும் இதர இரண்டு மாவோயிஸ்டுகளும் காயங்களுடன் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் தமிழகத்துக்குத் தப்பி வர வாய்ப்பு இருப்பதால் தமிழக எல்லையான கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளும்  விழிப்்பூட்டப்பட்டு இருந்தன.

இந்நிலையில், தமிழக சிறப்பு அதிரடிப் படையினர் ஆனைகட்டி அருகே மூலக்கண் பகுதியில்  நடத்திய சோதனையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் தீபக் தென்பட்டார்.  தப்பி ஓட முயன்ற தீபக் கைதானார்.  இதில் தீபக்குக்கு இடது காலில் காயம் ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில்  அவர் அனுமதிக்கப்பட்டார்.