கட்சியில் ஸ்டாலினுக்கு கூடுதல் அதிகாரம்

சென்னை: திமுகவில் நிர்வாகிகளைச் சேர்க்கவும் நீக்கவும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு புதிதாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பொறுப்புகள் இதுவரை பொதுச் செயலாளர் க.அன்பழகனிடம் இருந்தன. 

அவர் முதுமை காரணமாக உடல்நலம் குன்றி ஓய்வில் இருக்கி றார். நிர்வாகிகள் சேர்ப்பு, நீக்கம் போன்ற நடவடிக்கைகள் குறித்து அன்பழகன் முடிவெடுக்க இயலாது என்பதால் அவரது அதிகாரங்களை ஸ்டாலினுக்கு மாற்றிவிடும் வகையில் கட்சியின் விதிகளில் மாற்றம் செய்ய திமுக பொதுக்குழு அனுமதி அளித்துள்ளது.

திமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நேற்றுக் காலை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.  மேடையில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, கருணாநிதி படங்களுக்கு ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இணையத்தளம் மூலம் திமுக உறுப்பினர்களைச் சேர்க்கும் வகையில் கட்சி விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. திமுக அமைப்புத் தேர்தலை அடுத்த ஆண்டுக்குள் நடத்தி முடிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ மறைவுக்கும் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்திற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.