தேர்தல் பணிகளைத் தொடங்கியது அதிமுக: ஐந்து லட்சம் முதியோர் வாக்குகளுக்கு குறி

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் வரும் 15, 16 தேதிகளில் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகங்களில் கட்டணங்களைச் செலுத்தி விருப்பமனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருப்ப மனு பெறுவதற்கான கட்டணங்களையும் அதிமுக அறிவித்துள்ளது. மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25 ஆயிரம், மாமன்ற உறுப்பினர் (மாநகராட்சி வார்டு) பதவிக்கு ரூ.5,000, நகர் மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.10,000, நகர் மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.2,500, பேரூராட்சி மன்றத் தலைவர் ரூ.5,000, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,500, மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.5,000, ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.3,000 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை அடுத்த மாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை அதிமுக வகுத்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தெருவிலும் முதியோர்கள் கணிசமாக உள்ளனர். இவர்களின் வாக்குகளை முழுமையாகப் பெற அதிமுக புதிய முயற்சி எடுத்துள்ளது. பல பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவித்தொகை கிடைக்க அரசு தீவிர முயற்சி எடுத்துள்ளது. அதற்கான விண்ணப்பத்தை முதலமைச்சர் அலுவலகத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் ஏராளமானோர் கொடுத்துள்ளனர். முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மட்டும் 1½ லட்சம் விண்ணப்பங்கள் சென்றுள்ளன.

ஏழ்மை நிலையில் இருக்கும் ஐந்து லட்சம் முதியோர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்க ரூ.618 கோடியை அரசு ஒதுக்கி உள்ளது. தேர்தலுக்கு முன்னதாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் ஏற்கெனவே 29 லட்சம் பேர் மாதாமாதம் உதவித் தொகை பெற்று வருகின்றனர். 500 ரூபாயாக இருந்த உதவித் தொகையை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆயிரம் ரூபாயாக உயர்த்தினார். 

புதிதாக ஐந்து லட்சம் முதியோருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதன் மூலம் உள்ளாட்சித் தேர்தலில் அவர்களின் வாக்குகளை மொத்தமாக அதிமுகவுக்குக் கிடைக்கச் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.