போலிஸ் வாகனம் மோதி பெண் மரணம்; முதல்வர் உதவி

தென்காசி: நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பயணிகள் சிலர் தென்காசி செல்வதற்காக திரிகூடபுரம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த போலிஸ் வாகனம் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் பயணிகள் கூட்டத்தில் புகுந்தது. 

அவர்கள் அலறியடித்து ஓடினர். இருந்தபோதிலும் அந்த வாகனத்தில் சிக்கி பெண் ஒருவர் மாண்டார். அவர் திரிகூடபுரத்தைச் சேர்ந்த மைதீன் பிச்சை மனைவி ஆயிஷா பானு, 44, என்று அடையாளம் காணப்பட்டது. இதர மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து பற்றி அறிந்த முதல்வர் பழனிசாமி, ஆயிஷா பானு குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய்; பலத்த காயமடைந்தோருக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய்; லேசான காயமடைந்தோருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

சாலையில் சென்று கொண்டு இருந்த போலிஸ் வேனின் டயர் திடீர் என்று வெடித்ததால் பயணிகளின் கூட்டத்துக்குள் அது புகுந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.