கல்யாண வீட்டில் கண்டதும் காதல்: சைகை மொழியில் பேசி உடனே திருமணம்

2 mins read
b3a42c0d-dce7-444e-85a2-57eb29c6db40
கண்டதுமே காதல் கொண்டு திருமணம் செய்துகொண்ட மாற்றுத் திறனாளிகளான ராமராஜன்- தேவி. படம்: தமிழக ஊடகம் -

புதுக்கோட்டை: எத்தனையோ திருமணங்கள் கடைசி நேரத்தில் தடைபட்டு உறவினர்களைத் துயரத்தில் ஆழ்த்திவிடும் சம்பவங்கள் அப்போதைக்கு அப்போது நிகழ்வதுண்டு.

ஆனால் ஒரு திருணமத்திற்கு வந்த இருவர், அதே இடத்தில் காதல் கொண்டு அதே இடத்தில் மணம் முடித்த மகிழ்ச்சிகரமான ஒரு சம்பவம் புதுக்கோட்டை அருகே நிகழ்ந்து இருக்கிறது.

அந்த மாவட்டத்தில் கறம்பக்குடி என்ற பகுதியில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த மணமக்களுக்கு முறைப்படி திருமணம் நடந்தது.

அந்தத் திருமணத்திற்கு கறம்பக்குடி அருகே இருக்கும் பிலாவிடுதி என்ற ஊரைச் சேர்ந்த ராமராஜன், 30, என்ற மாற்றுத்திறனாளியும் வந்திருந்தார். ராமராஜனுக்கு பேச முடியாது.

திருமண மணமக்களை வாழ்த்துவதற்காக தேவி என்ற 27 வயதுடைய ஒரு பெண்ணும் அங்கு இருந்தார். தேவியும் மாற்றுத்திறனாளி ஆவார். திருமண மண்டபத்தில் ராமராஜனும் தேவியும் முதல்தடவையாக யதார்த்தமாகச் சந்தித்தனர். கண்ட உடனேயே அந்த இருவரின் மனதிலும் காதல் அரும்பிவிட்டது.

இருவரும் தங்களுக்கே உரிய சைகை மொழியில் பேசி காதலை வெளிப்படுத்தினர். பிறகு மனம் ஒன்றித்து திருமணம் செய்துகொள்ள தேவியும் ராமராஜனும் முடிவு எடுத்தார்கள்.

தேவியுடன் ராமராஜன், தன்னுடைய உறவினர்களையும் தேவியின் உறவினர்களையும் சந்தித்து தங்களுடைய காதலை வெளிப்படுத்தினர். இருவீட்டாரும் மிகவும் மகிழ்ந்தனர். இருவருக்கும் அதே நாளில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்தத் திருமண மண்டபத்திற்குப்பக்கத்தில் இருக்கும் முருகன் கோயிலுக்கு எல்லாரும் சென்றனர். அங்கு ராமராஜன், தேவிக்குச் சிறப்பாக திருமணம் நடந்தது.

முன்னதாக திருமண மண்டபத்தில் மணம் புரிந்த புதிய மணமக்கள் உட்பட எல்லாரும் இந்தத் தம்பதியரை வாழ்த்தினார்கள்.