அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து பெண்ணின் கால்கள் நசுங்கின; ஆடவர் படுகாயம்

அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து பெண்ணின் கால்கள் நசுங்கின; ஆடவர் படுகாயம்

2 mins read
40e36ca1-9fcc-4e63-91a1-4ab1a71bd9c6
சாலையின் நடுவே நடப்பட்டிருந்த அதிமுக கொடிக்கம்பம் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது. படம்: ஊடகம் -

கோவை: அதிமுக கட்சிக் கொடிக்கம்பம் சரிந்து விழுந்த விபத்தில் ஒரு பெண் உட்பட இருவர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. 30 வயதான இவர் வயதான தன் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

நட்சத்திர விடுதி ஒன்றில் பணியாற்றி வரும் ராஜேஸ்வரி, நேற்று முன்தினம் அவிநாசி சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே நடப்பட்டிருந்த அதிமுக கொடிக்கம்பம் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது.

இதனால் பதறிப்போன ராஜேஸ்வரி தனது வாகனத்தை உடனடியாக நிறுத்த முற்பட்டபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று அவர் மீது மோதியது.

கீழே விழுந்த ராஜேஸ்வரியின் கால்கள் மீது லாரிச் சக்கரங்கள் ஏறி இறங்கியதில் இரு கால்களும் நசுங்கின. இந்நிலையில் லாரி கட்டுப்பாட்டை இழந்து ஓடி இன்னொரு இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது. அதில் பயணம் செய்த நித்தியானந்தம் என்ற இளையர் படுகாயமடைந்தார்.

இதற்கிடையே சாலையில் மயங்கிக் கிடந்த ராஜேஸ்வரியைப் பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கட்சிக் கொடிக்கம்பம் விழுந்ததால்தான் ராஜேஸ்வரி நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்க நேர்ந்ததாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறை, விபத்து நடந்த பகுதியில் கொடிக்கம்பம் எதுவும் கீழே விழவில்லை எனத் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆளுங்கட்சிப் பிரமுகர்களைக் காப்பாற்றும் நோக்கில் போலிசார் செயல்படுவதாக ராஜேஸ்வரி தரப்பு குற்றம் சாட்டுவதாகத் தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில்தான் அதிமுக பிரமுகர் சார்பில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பதாகை ஒன்று சரிந்து விழுந்து இளம்பெண் ஒருவர் சென்னையில் உயிரிழந்தார். இந்நிலையில் கோவையிலும் அதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முதல்வர் பழனிசாமியின் வருகையையொட்டி அவரை வரவேற்கும் விதமாக அதிமுக கொடிக்கம்பம் அவிநாசி சாலையில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்த விபத்து தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுகவினரின் விளம்பர வெறிக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படுமென கேள்வி எழுப்பியுள்ளார்.