ஆட்டம்காட்டி, பின் அகப்பட்ட 'அரிசி ராஜா'

ஆட்டம்காட்டி, பின் அகப்பட்ட 'அரிசி ராஜா'

2 mins read
71808cc8-da27-41c9-a10e-fdd5358ea075
தயார் நிலையில் இருந்த அதிகாரிகள் நள்ளிரவு  வேளையில் 'அரிசி ராஜா'வுக்கு மயக்க ஊசி செலுத்தினர். படங்கள்: ஊடகம் -
multi-img1 of 2

கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தை ஒட்டிய அர்த்தனாரிபாளையம், நவமலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களாக அட்டகாசம் செய்துவந்த 'அரிசி ராஜா' என்ற காட்டு ஆண் யானையை பெரும்பாடுபட்டு அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

இந்த யானை கடந்த நான்கு மாதங்களில் மூன்று பேரைக் கொன்றுள்ளது. எழுவர் காயம் அடைந்தனர். யானையை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, அரசாங்கம் அதற்கு உத்தரவிட்டது.

அந்த வட்டார வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 'அரிசி ராஜா'வைப் பிடிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவும், திங்கள்கிழமை இரவும் மழை பெய்ததால் அரிசிராஜா யானை வனப்பகுதியை விட்டு வெளியில் வரவில்லை.

இந்த நிலையில் அரிசி ராஜா யானையை பிடிப்பதற்கு கலீம், பாரி ஆகிய கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டு அர்த்தநாரிபாளையம் பெருமாள் மலை அடிவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

கடந்த திங்கட்கிழமை இரவு பாரி எனும் கும்கி யானைக்கு மதம் பிடித்ததைத் தொடர்ந்து, அது முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதற்குப் பதிலாக டாப்சிலிப்பில் இருந்து கபில்தேவ் எனும் கும்கி யானை கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், 'அரிசி ராஜா' யானை அர்த்தநாரிபாளையம் பகுதிக்கு வராமல் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்தது. வனத்துறையினர் மூன்று குழுக்களாகப் பிரிந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை அர்த்தநாரிபாளையத்தை அடுத்த ஆண்டிபாளையம் பகுதியில் 'அரிசி ராஜா' யானை இருப்பது தெரியவந்தது. நள்ளிரவு 12 மணியளவில் ஆண்டியூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் காட்டு யானை 'அரிசி ராஜா' புகுந்தது.

இதையடுத்து அங்கு தயார் நிலையில் இருந்த அதிகாரிகள் 'அரிசி ராஜா'வுக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

காலை வரை காத்திருந்து கும்கி யானைகள் மற்றும் பொக்லைன் எந்திர உதவியுடன் காட்டு யானை 'அரிசி ராஜா' லாரியில் ஏற்றப்பட்டு டாப்சிலிப்பில் உள்ள வரகளியாறு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்