சுடச் சுடச் செய்திகள்

மது விருந்தால் சுயநினைவிழந்த 4 இளைஞர்கள் ரயில் மோதி பலி

கோவை: ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய இளை ஞர்கள் நால்வர் சுயநினைவிழந்ததன் காரணமாக படுவேகமாக வந்த  ரயில் மோதி உயிரிழந்தனர்.  கோவை மாவட்டத்தில் இருகூர் அருகே ராவுத்தர் பாலம் பகுதியில் இந்த விபத்து நடந்தது. 

நேற்று அதிகாலை நேரத்தில் இவர்கள் நால்வரும் உயிரிழந்தது  குறித்து போலிசார் அருகில் உள்ளவர்களிடமும் சிசிடிவி காட்சிகள் மூலமும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் எனும் பகுதியில் வசித்து வருபவர்கள் கல்லூரி மாணவர்கள் கருப்பசாமி மற்றும் கௌதம்.  கல்லூரியில் படித்து வரும்  இவர்கள் இருவரும் இணைந்து மறு தேர்வு எழுதுவதற்காக சூலூர் சென்றிருக்கின்றனர்.

கருப்பசாமியும் கௌதமும் இருகூர் என்ற இடத்தில் அறை எடுத்து தங்கி இருந்தனர். இவர்களுடன் ஒரே கல்லூரியில் படித்து வரும் விஸ்வநேசன், சித்திக் ராஜா, ராஜசேகர் ஆகியோரும்  இணைந்து அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது ரயில் நிலையத்தின் அருகில் இருந்த தண்டவாளத்தில் அமர்ந்து ஐவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னையை நோக்கி வந்த அதிவேக ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியவர்கள் மீது மோதியுள்ளது.  ரயில் மோதியதில் கருப்பசாமி,  கௌதம், சித்திக் ராஜா, ராஜசேகர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இதில் விஸ்வநேசன் மட்டும் அதிர்ஷ்டவசமாக படுகாயங்களுடன் உயிர்தப்பிய நிலையில்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலிசாரின் விசாரணை தொடர்கிறது.