வட்டி கொடுமை; குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி

நெல்லை: ரூ.50,000 கடனாக வாங்கிய பணத்துக்கு வட்டி கட்ட முடியாமல் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன் தனது மூன்று குழந்தைகள், மனைவியுடன் உடலில் மண்ணெண்ணெய்  ஊற்றி தீக்குளிக்க முயன்றவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 

நெல்லை மேல கருங்குளத்தை சேர்ந்தவர் அருள்தாஸ். சாயம் பூசும் வேலை செய்துவரும் இவர் கூறு கையில், “4 வருடமாக ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக வட்டி கட்டி வந்துள்ளேன். கடந்த 6 மாதமாக தொழில் சரியாக இல்லாத காரணத்தால் வட்டி கட்ட முடியவில்லை. 

“வாங்கிய தொகை 50 ஆயிரமும் வட்டி ஒரு லட்சமும் கட்ட வேண்டும் எனவும் கூறி கிருஷ்ணன் என்பவர் இன்று காலை வீட்டிற்கு வந்து என்னை கட்டையால் அடித்து துன்புறுத்தினார். மேலும் செல்போனையும் பறித்து சென்றார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு வேறு வழியின்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட வந்தேன்.” எனத் தெரிவித்தார்.