சாதனக் கொள்முதலில் ரூ.350 கோடி ஊழல் புகார்: விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு

சென்னை: தமிழக போலிஸ் துறைக்குச் சாதனங்கள் கொள்முதல் செய்ததன் தொடர்பில் ரூ. 350 கோடி ஊழல் நடந்துள்ளதாக புகார்கள் தலை எடுத்துள்ளன. இது பற்றி விசாரணை நடத்தும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக போலிஸ் துறைக்குத் தொழில்நுட்பக் கருவிகள், கண்காணிப்புப் படச்சாதனங்கள், சில திட்டங்களை  நடைமுறைப்படுத்துவதற்கான ஏலக்குத்தகை நடைமுறைகள் ஆகியவற்றில் ரூ.350 கோடி முறைகேடு நடந்துள்ளதாக புகார் கிளம்பி இருக்கிறது.

தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களுக்கான மின்னிலக்க நடமாடும் வானொலி முறைக்கு ஏலக்குத்தகை நடைமுறைகளை மீறி ‘வி லிங்க் சிஸ்டம்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு  குத்தகை வழங்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தொழில்நுட்பப் பிரிவின் சில அலுவலர்கள் நடைமுறை தவறுகளில் ஈடுபட்டதாகத் தெரியவந்துஉள்ளது. எனவே இது தொடர்பாக போலிஸ் பரிந்துரையின் அடிப்படையில் முதல்வர், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாக தமிழக தொழில்நுட்பச் சேவைகள் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அசோக்குமார் தாஸ் செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்தப் புகார்கள் தொடர்பில் விசாரணை நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.