சுடச் சுடச் செய்திகள்

அரசு திட்டங்களுக்கு நிதி: அமெரிக்காவில் தீவிர முயற்சி

வாஷிங்டன்: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் திட்டங்களுக்கு நிதி திரட்டும் வகையில் வாஷிங்டனில் உலக வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். குறைந்த விலையில் வீடுகள் கட்ட நிதியுதவி அளிக்கும்படி அவர் வலியுறுத்தினார். 

அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள துணை முதல்வர், சிகாகோ நகரில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 

இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்புக் கருத்தரங்கில் பங்கேற்று தமிழகத்துக்கு ரூ.710 கோடி முதலீடு திரட்டும் ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார். பின்னர் அவர் சிகாகோ பயணத்தை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை வாஷிங்டன் நகருக்குச் சென்றார்.

அங்குள்ள உலக வங்கி அலுவலகத்திற்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம், உலக வங்கிச் செயல் இயக்குனர் அபர்ணாவுடன் தமிழக திட்டங்களுக்கு நிதி திரட்டுவதன் தொடர்பில் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர், வீட்டு வசதி மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்களுக்குத் தேவையான நிதி உதவிகளைப் பெறுவதற்காக இந்த ஆலோசனை நடத்தப்பட்டது. 

உலக வங்கி, 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழக அரசின் வீடு கட்டும் திட்டத்தில் ஈடுபடும் வகையில், அந்த வங்கி ஊழியர் களுடன் இணைந்து குடியிருப்புத் திட்டத்தை தமிழக அரசு தயாரித்து வருவதாகவும் இத்திட்டத்துக்கு உலக வங்கி ஆதரவு தரவேண்டும் என்றும் துணை முதல்வர் கோரிக்கை விடுத்தார். 

பிறகு அனைத்துலக நிதி நிறுவன அலுவலகத்திற்குச் சென்று தமிழகத்தில் பொது நிதி, செல வினம் மற்றும் நிதி திறன் மேம் பாட்டுத் திட்டங்கள் குறித்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். வாஷிங்டனில் கட்டுமானத் தொழில் நுட்பங்களை துணை முதல்வர் பார்வையிட்டார்.