அமைச்சர்: அதிமுக ஏழைகளின் கட்சி; திமுக கோடீஸ்வர கட்சி

சென்னை: அதிமுக ஏழைகளின் கட்சி என்றும் திமுக கோடீஸ்வரர்கள் கட்சி என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திமுகவில் மேயர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.50,000 என நிர்ணயித்துள்ளது பற்றி கருத்து கூறியபோது அந்தக் கட்சி கோடீஸ் வரர்கள் நிறைந்த கட்சி என்றார்.

தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழும் வகையில் சட்டம், ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வருவதால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். 

எதிர்க்கட்சித் தலைவரான திமுக தலைவர் ஸ்டாலின், பொறுப்புடன் பேசவில்லை என்று அமைச்சர் கூறினார். இவ்வேளையில், தேர்தல் ஆணையச் செயலாளரை அதிமுக அரசாங்கம் மாற்றியதற்கு காரணம் உள்ளாட்சித் தேர்தலில் தில்லுமுல்லில் ஈடுபடவா அல்லது தேர்தலைத் தள்ளிவைக்கவா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையச் செயலாளர் எஸ். பழனிசாமியை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதேபோல, விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக உள்ள சுப்ரமணியத்தை மாநில தேர்தல் ஆணையச் செயலாளராக அது நியமித்தது. இதை ஸ்டாலின் குறைகூறி வருகிறார்.