சுடச் சுடச் செய்திகள்

இறந்துபோன பெண்ணின் கணக்கிலிருந்து பெருந்தொகையை ஏப்பம்விட்ட வங்கி அதிகாரிகள்

திருச்சியைச் சேர்ந்த எமிலிசோலா எனும் பெண், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி ஜமால் முகமது கல்லூரி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். 

தமது வங்கி கணக்கில் 30,00,000 ரூபாய்க்கும் மேல் பணத்தை சேமித்து வைத்திருந்தார் எமிலிசோலா. 

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எமிலிசோலா இறந்துபோனார். அவரது வங்கி கணக்கில் இருந்த பணத்தை யாரும் உரிமைகொண்டாடவில்லை.
 
அந்த வங்கியின் மேலாளராகப் பணியாற்றிய 58 வயது ஷேக் மொய்தீன், அதே வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றிய சின்னத்துரை ஆகிய இருவரும் அந்தப் பணத்தைக் கையாடல் செய்யத் திட்டமிட்டனர்.

அதற்காக, முதலில் எமிலிசோலா பெயரிலான வங்கிக் கணக்கை மீண்டும் புதுப்பித்தனர். 

பின்னர் எமிலிசோலா விண்ணப்பித்ததுபோல போலியாக கையெழுத்திட்டு ஏடிஎம் அட்டை ஒன்றை அதிகாரிகள் இருவரும் உருவாக்கினார்கள்.

இருவரும் கூட்டு சேர்ந்து ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி, பல்வேறு கட்டங்களாக மொத்தம் 25,08,050 ரூபாயை மரணம் அடைந்த எமிலிசோலாவின் சேமிப்புக் கணக்கில் இருந்து கையாடல் செய்தனர்.

வங்கியில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை நடவடிக்கையின்போது வாடிக்கையாளர் எமிலிசோலா தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வங்கிக் கணக்கைப் பயன்படுத்தாமல், பின்னர் ஏடிஎம் அட்டை மூலம் பணத்தை எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் வாடிக்கையாளர் எமிலிசோலா மரணம் அடைந்த பின்னர் ஏடிஎம் அட்டைக்கான விண்ணப்பம் பெறப்பட்டது, பணம் கையாடல் செய்யப்பட்டது போன்றவை வெளிச்சத்துக்கு வந்தன.

இதில் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

மேலும் அவர்கள் மீது போலிசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோர் மீது கூட்டு சதி, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity