காரைக்குடியில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலை சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் இளங்கோ மணி. இவரது வீடு மகர் 
நோன்பு திடல் பகுதியில் உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கோமணி, தனது குடும்பத்தினருடன் தைவான் நாட்டுக்குச் சுற்றுலா சென்றுவிட்டு நேற்று நள்ளிரவு வீடு திரும்பினர்.

வீட்டின் கதவைத் திறக்க முயன்றபோது, பூட்டு எற்கெனவே உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த இளங்கோமணி மற்றும் குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

வீட்டின் ஆறு அறைகளிலும் பொருட்கள் தாறுமாறாக சிதறிக்கிடந்தன. பொருட்கள் கொள்ளைபோயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து இளங்கோமணி காரைக்குடி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலிசார் விசாரணையைத் தொடங்கினர். கைரேகை நிபுணர்களும் தடயங்களைச் சேகரித்தனர்.

வீட்டில் இருந்த 200 சவரன் நகைகள், வெள்ளிப்பொருள்கள் போன்றவை கொள்ளைபோயிருப்பதாக போலிசாரிடம் இளங்கோமணி தெரிவித்தார்.

அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமிரா பதிவுகள் மூலம் கொள்ளையர்கள் பற்றிய விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சில நாட்களாக வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு, யாரோ திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்பட்டது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity