சிங்கப்பூரிலிருந்து சென்றவர் சென்னை விமான நிலையத்தில் கடத்தப்பட்டார்

சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குச் சென்றவரை மர்ம ஆசாமிகள் கடத்தியுள்ளனர்.

கடலுாரைச் சேர்ந்த 33 வயது தணிகைவேலு இம்மாதம் 14ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் சென்னை சென்றார். 

அப்போது தங்கம் வைத்திருந்ததாகக் கூறி அவரை மர்ம கும்பல் கடத்திச் சென்றது.

இதையடுத்து, தணிகைவேலுவின் தந்தை கலியமூர்த்தி சென்னை விமான நிலைய போலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

புகார் மனுவில், சென்னை விமான நிலையத்தில் என் மகன் தணிகைவேலுவை மர்ம ஆசாமிகள் கடத்தியுள்ளனர். கடத்தல்காரர்கள் என்னை போனில் அழைத்து, “உங்கள் மகன் எங்களிடம்தான் இருக்கிறான். சிங்கப்பூரில் கொடுத்து அனுப்பிய தங்கத்தை அவன் தர மறுக்கிறான். காணாமல் போய்விட்டதாகச் சொல்கிறான்.

“அதனால் அவனை கடத்தியுள்ளோம். உடனே 10 லட்சம் ரூபாய் தந்தால் விடுவிக்கிறோம், இல்லையேல், கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுகின்றனர்," என்று கலியமூர்த்தி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து விசாரிக்க தனிப்படை ஒன்றை அமைத்துள்ள சென்னை விமான நிலைய போலிசார் கடத்தல்காரர்களுக்கு வலை வீசியுள்ளனர்.