குடும்ப அரசியல் பற்றி ஸ்டாலின் விளக்கம்

சேலம்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குடும்ப அரசியலைப் பற்றி விளக்கியுள்ளார். 

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் சேலத்தில் நேற்று நடைபெற்ற மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் ‘திராவிட இயக்கத்தில் என் பயணம்’ என்ற வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் ேபசினார்.

“இன்றைக்கு மிகப் பெரிய சர்ச்சையாகிக்கொண்டு இருக்கிறது மிசா. நான் மிசாவில் இருந்தேனா இல்லையா என்பது இந்த நாட்டில் விவாதம் ஆகிக்கொண்டு இருக்கிறது. “1975ஆம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அந்த நெருக்கடி நிலையை எதிர்த்து முதல் முதலில் குரல் கொடுத்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

“1976ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழக அரசு கலைக்கப்படுகிறது. கழகத்தைச் சேர்ந்த எங்களைப் போன்ற பலரும் கைது செய்யப்படுகிறார்கள். நான் பிப்ரவரி 2ஆம் தேதி கைது செய்யப்படுகிறேன். தமிழகம் முழுவதும் நம்முடைய தோழர்கள் பல்வேறு மத்தியச் சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள்.

“பிப்ரவரி மாதம் 6ஆம் நாள் தனது மூத்த மகள் மகேஸ்வரி - காசி ஆகியோர் திருமணத்தை தலைவர் கலைஞர் அவர்கள் நடத்தி வைக்க வேண்டும். அதற்குள் ஆட்சி கலைக்கப்பட்டு நாங்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்டோம்.

“இந்த நிலையில் வீரபாண்டியாரை அழைத்து கலைஞர் சொல்கிறார். இந்த திருமணத்தை நான் நடத்தி வைக்க வந்தால், உடனே உன்னைக் கைது செய்து விடுவார்கள். அதனால் முன்னணியினரை வைத்து நீயே நடத்தி விடு என்று தலைவர் சொல்கிறார். இதனை ஏற்றுக்கொள்ளக்கூடியவரா வீரபாண்டியார்? எது நடந்தாலும் பரவாயில்லை. நீங்கள் வந்து தான் நடத்த வேண்டும் என்கிறார் வீரபாண்டியார். ஆனால் ஒரு சுப நிகழ்ச்சி நடைபெறும்போது தன்னால் எந்தப் பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்பதால் கலைஞர் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

“திருமணம் முடிந்ததும் மணமக்கள் சொந்த ஊருக்கு மறுவீட்டுக்குச் செல்வதற்கு முன்னால் வழி மறிக்கப்பட்டு வீரபாண்டியார் கைது செய்யப்பட்ட காட்சி கண்ணீரை வரவழைக்கிறது.

“திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கலைஞரின் தளபதி என்பதற்காக வீரபாண்டியார் கைது செய்யப்படுகிறார். அரசியல் கைதியாக. ஆனால் அதற்காக அவரது குடும்பத்தினர் அனுபவித்த சித்திரவதைகள் சொல்லி மாளாதவை!

“மதுரைச் சிறையில் இருந்து சேலம் நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த வீரபாண்டியாரை கையில் விலங்கு போட்டு ரயில் கம்பியில் பிணைத்து, உட்காரவைத்து அழைத்து வந்தார்கள்.

“குடும்ப அரசியல் ஏன் செய்கிறார்கள் என்றால், குடும்பம் குடும்பமாக இக்கட்சிக்கு உழைத்தார்கள். குடும்பம் குடும்பமாக பாடுபட்டார்கள். குடும்பம் குடும்பமாக சிறைக்குச் சென்றார்கள்,” என்று ஸ்டாலின் கூறினார்.

மேலும் பேசிய அவர், வன்னியர் சமுதாயத்திற்காக இடஒதுக்கீடு வழங்குவதில் தலைவர் கலைஞர் காட்டிய உறுதியும் அதற்காக வீரபாண்டியார் எடுத்த முயற்சியும் விரிவாக நூலில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது,” என்றார்.

“இதனைப் படிக்கும்போது கழகத்தின் முன்னணி வீரர்கள் 100 பேர் இதுபோன்ற வரலாற்றை எழுதினால் அதுதான் திமுக வரலாறு என்பது திண்ணமாகிறது.

“இன்று தமிழகத்தில் இருக்கும் அநியாய ஆட்சியை விரட்டுகிற வரையில் அந்தப் போராட்டத்தை நாம் தொடருவோம்! அது அண்ணன் வீரபாண்டியார் மீது நாம் எடுக்கின்ற சபதமாக இருக்க வேண்டும்” என்று ஸ்டாலின் கூறினார்.