நிச்சயம் அதிசயம் நிகழும்; ரஜினிகாந்த் சூசகம்

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் தமது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றியமைக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கட்சியாக அறிவிக்கப்படும்போது ரஜினி மக்கள் மன்றம் பெயர் மாற்றம் காண வாய்ப்புகள் இருப்பாகக் கூறப்படுகிறது. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக ரஜினிகாந்த் கூறி வருகிறார். அவர் கூறும் வெற்றிடத்தை நிரப்ப அவரே அரசியல் களம் காணக்கூடும் என்று நம்பப்படுகிறது.

“ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு அரசியல் கட்சியைத் தொடங்குவார்  என்பதில் சந்தேகம் இல்லை. 2021ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அவர் தலைமையிலான கூட்டணி போட்டியிடும்,” என்று எழுத்தாளரும் சொற்பொழிவாளருமான தமிழருவி மணியன் தெரிவித்தார். ரஜினிகாந்த் பாஜகவுடன் நெருக்கமானவர் என்று பரவலாக நம்பப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று கூறப்படுகிறது.

“வலிமைமிக்க, நேர்மையான தலைவருக்கு இடம் இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். 

“பாஜகவையும் அக்கட்சி தமிழக வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடும்,” என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டு சினிமா பயணத்தை கௌரவிக்கும் வகையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், ‘உங்கள் நான்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் முதலமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார் எனக் கூறினார்.  அவர் முதல்வர் பதவியேற்றவுடன் நான்கு மாதங்களில் ஆட்சி கவிழும் என்று பலர் சொன்னதை ரஜினிகாந்த் சுட்டினார். 

எதிர்பாராத விதமாக எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நீடிப்பதுபோல எதிர்காலத்தில் நிச்சயம் இன்னோர் அதிசயம் நிகழும் என்றும் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்றும் சூசகமாகத் தெரிவித்தார் ரஜினிகாந்த்.