மாணவர்களுக்கு கஞ்சா விநியோகித்த ஐவர் கைது

மாணவர்களுக்கு கஞ்சா விநியோகித்த ஐவர் கைது

2 mins read
a8bb57ee-c1bc-40e2-a035-88b9081ca04a
-

தாம்பரம்: சென்னை புறநகர்ப் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் கஞ்சா விற்பனையால் அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது.

கஞ்சா போதைக்கு அடிமையாகும் மாணவர்களின் எண்ணிக்கை தினம்தோறும் அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

"பல கனவுகளோடு எங்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரி களுக்கு அனுப்புகிறோம். அவர் களின் பொன்னான வாழ்வை சீரழித்து வரும் கஞ்சா விற்பனையாளர்கள் மீது போலிசார் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், பல்லாவரம் வேல்ஸ் கல்லூரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட எண்ணூரைச் சேர்ந்த காளிதாஸ், 37, அரிவேந்தன், 26, பரத்குமார், 24, தாம்பரத்தைச் சேர்ந்த அபினேஷ், 24, யோகேஷ், 23, ஆகிய ஐவரை பல்லாவரம் போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் இருந்து 3½ கிலோ கஞ்சா பொட்டலங்களையும் மோட்டார்சைக்கிளையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், கைதான காளிதாஸ்தான் பல்லாவரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பலின் தலைவனாக செயல்பட்டது தெரியவந்தது.

இவரின் கீழ் பலபேர் கொண்ட கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் முன்பு சென்னை சத்யாநகரில் இருந்து கஞ்சா வாங்கியதாகவும் தற்போது சென்னையில் கெடுபிடி அதிகமாக இருப்பதால் ஆந்திராவில் இருந்து இருசக்கர வாகனத்தில் கஞ்சாவை கடத்தி வந்து விற்பதும் அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலிசார் கூறினர்.

சென்னை புறநகர்ப் பகுதிகளான சேலையூர், சிட்லப்பாக்கம், பீர்க்கன்காரணை, பல்லாவரம், சங்கர்நகர், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கடந்த சில மாதங்களாக கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக சேலையூர், பீர்க்கன்காரணை பகுதிகளில் உள்ள கல்லூரிகள், பள்ளிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடந்துவருகிறது.

கிழக்கு தாம்பரம் ரெயில்வே கேட் பகுதி, ரயில்வே மைதானம், கிறிஸ்தவ கல்லூரி வெளி வளாகப் பகுதி, இந்திய விமானப்படை சாலை, அகரம் சாலை, திருவாஞ்சேரியில் இந்த கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்கிறது.

அதேபோல் பல்லாவரம், பம்மல் பகுதிகளிலும் ரேடியல் சாலை, வேல்ஸ் பல்கலைக்கழகம் செல்லும் சாலைப் பகுதிகளில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.

மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுகிறது.