பேருந்து நிலையங்களை சுத்தமாக வைத்திருக்கவேண்டும்: அரசு கட்டளை

பேருந்து நிலையங்களை சுத்தமாக வைத்திருக்கவேண்டும்: அரசு கட்டளை

2 mins read
def40140-a00f-4b96-9e92-60b4d6c5e7e3
-

சென்னை: தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநில போக்குவரத்துத் துறைகளும் பேருந்து நிலையங்களைத் தூய்மைப்படுத்தி அவற்றைத் துப்புரவாக வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கம் தடாலடியாக உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

அதோடு மட்டுமின்றி, பேருந்து நிலையங்கள் அனைத்திலும் கழிவறைகள் 24 மணி நேரமும் சுத்தமாக இருக்கவேண்டும். குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இருக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கம் கட்டளையிட்டு இருக்கிறது.

நாட்டில் பொது போக்குவரத்துக்கான தேவை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, தான் இந்த உத்தரவுகளைப் பிறப்பிப்பதாக பாஜக அரசு குறிப்பிட்டுள்ளது.

பேருந்து நிலையங்களைத் தூய்மையாக வைத்திருப்பதற்கு நிரந்தரமான, நிலையான ஏற்பாடுகளை அமல்படுத்தும்படியும் அது போக்கு வரத்துத் துறைகளைக் கேட்டுக்கொண்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கப் பேருந்துகளில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கையில் 30 லட்சம் குறைவு ஏற்பட்டுவிட்டது.

அரசாங்கப் பேருந்துகளில் நாள் ஒன்றுக்கு இடம்பெற்ற பயணங்களின் எண்ணிக்கை 2018 ஜனவரி வரை 2.1 கோடியாக இருந்தது.

ஆனால் இது இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 1.8 கோடியாகக் குறைந்துவிட்டது என்பது அதிகாரபூர்வ அறிக்கைகள் மூலமாகவும் மாநில போக்குவரத்து கொள்கைப் பத்திரங்கள் மூலமாகவும் தெரியவருகிறது.

சாலைகளில் தனியார் வாகனங்களின் பங்கைக் குறைத்து அதன்மூலம் போக்குவரத்து தேக்கங்களைக் களைவதற்குத் தோதாக பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும்படி மத்திய சாலைப் போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சு அனைத்து மாநிலங்களையும் கேட்டுக்கொண்டது.

மக்கள் பொது போக்குவரத்தை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் என்றால் பேருந்து நிலையங்கள் தூய்மையாகவும் பயணிகளுக்கு அதிக வசதிகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசாங்கம் சுட்டிக்காட்டி இருக்கிறது.