10 அடி ஆழ குழிக்குள் விரதமிருக்கும் சாமியார்; பாதாள லிங்கமும் அங்குண்டு

10 அடி ஆழ குழிக்குள் விரதமிருக்கும் சாமியார்; பாதாள லிங்கமும் அங்குண்டு

1 mins read
eec55789-13f5-4287-8958-7eec94f77a8e
யாரும் எதிர்பாராத விதத்தில் 10 அடி ஆழக் குழி தோண்டி அதில் பாதாள லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்துள்ள அவர், கடந்த 17ஆம் தேதி முதல் உண்ணா நோன்பும் மௌன விரதமும் இருந்து வருகிறார். படம்: ஊடகம் -

ஈரோடு மாவட்டம் அந்தியூருக்கு அருகில் 10 அடி ஆழக் குழி தோண்டி, அதில் பாதாள லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து மௌன விரதம் இருந்துவரும் சாமியாரைக் காண அந்தப் பகுதியில் மக்கள் திரளாகச் சென்று வருகின்றனர்.

நல்லிக்கவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக அவர் துறவற வாழ்க்கை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டமுடைய அவர், அண்மையில் அமர்நாத் புனித யாத்திரை சென்றுவந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் 'நிஜானந்த காசி விஸ்வநாத சுவாமிகள்' என்று தனது பெயரை மாற்றி வைத்துக்கொண்டார் அவர்.

10 அடி ஆழ குழி தோண்டி 48 நாட்கள் விரதம் இருந்தால் உலக நன்மை கூடிவரும் என்று அமர்நாத் புனித யாத்திரையின்போது துறவி ஒருவர் அவரிடம் கூறியதாக, பயணத்திலிருந்து திரும்பிய பிறகு ஊர்க்காரர்கள் சிலரிடம் இவர் கூறியுள்ளார்.

யாரும் எதிர்பாராத விதத்தில் 10 அடி ஆழக் குழி தோண்டி அதில் பாதாள லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்துள்ள அவர், கடந்த 17ஆம் தேதி முதல் உண்ணா நோன்பும் மௌன விரதமும் இருந்து வருகிறார்.

பெரும்பாலான சமயங்களில் தியானத்தில் இருக்கும் அவர், அங்கு வரும் பக்தர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை காகிதத்தில் எழுதிக்காட்டி தீர்த்து வருகிறாராம். குழிக்குள் வேறு யாரும் இறங்குவதில்லை. அங்கிருந்தவாறே பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் அவர்.