பேறுகால அறுவை சிகிச்சைக்குப்பின் வயிற்றுக்குள் ஊசி

பேறுகால அறுவை சிகிச்சைக்குப்பின் வயிற்றுக்குள் ஊசி

1 mins read
7533a59d-1eb9-4910-980d-f3bbca52b0c3
ரம்யாவின் வயிற்றில் ஊசி இருப்பதைக் காட்டும் ஊடுகதிர்ப் படம். படங்கள்: ஊடகம் -

ராமநாதபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் பேறுகால சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் ஊசியை வைத்து தைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஆரம்ப மருத்துவமனையில் ரம்யா என்ற பெண் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ரம்யாவுக்கு 19ஆம் தேதி அறுவை சிகிச்சையின் மூலமாக அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆனால், ரம்யாவுக்கு கடந்த இரண்டு நாட்களாக வயிற்று வலியும் இரத்த கசிவும் ஏற்பட்டது. உடனடியாக அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஊடுகதிர் எடுத்துப் பார்த்தபோது அவரது வயிற்றில் ஊசி ஒன்று இருப்பது தெரியவந்தது.

பேறுகால அறுவை சிகிச்சையின்போது, செவிலியர்கள் கவனக்குறைவாக ரம்யாவின் வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ரம்யாவின் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

செவிலியர்களின் கவனமின்மையால் ரம்யாவுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, காவல்துறை இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity