திண்டுக்கல்: தவறு செய்யாத தன்னை பணி இடை நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கேட்டு தலைமை ஆசிரியர் ஒருவர் போராட்டம் நடத்தி உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா, 54, இவர் இடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அறையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி இட மாறுதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்த கலந்தாய்வில் பங்கேற்ற குஜிலியம்பாறை அரசு மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்திரா, 54, கலந்தாய்வுக்கு தன்னை அழைக்கவில்லை என்று புகார் கூறினார்.
அத்துடன், தனக்கு அருகிலுள்ள பள்ளியிலேயே தலைமை ஆசிரியர் பணியிட மாறுதல் தரவேண்டும் என கோரிக்கை விடுத்து தரையில் உருண்டார்.
இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அதன்பின்னர் நேற்று முதன்மைக் கல்வி அலுவலகம் வந்த அவர், “நான் தவறு எதுவும் செய்யவில்லை, இடைநீக்க உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்.
“பள்ளியில் இரு குழந்தைகள் மட்டுமே உள்ளனர். அவர்களும் சரியாக வருவது இல்லை. ஒரு கையைத் தூக்கமுடியாமல் சிரமப்படுகிறேன். இடமாறுதல் வழங்கவேண்டும்,” என தரையில் அமர்ந்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார்.
அவரிடம் முதன்மைக்கல்வி அலுவலரின் உதவியாளர் சுரேஷ்பாபு, போலிஸ் அதிகாரி அமுதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் எதற்கும் ஒத்து வராததால் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.