திருப்பூர்: திருப்பூர் அருகே மிக்ஸியை விற்று மது அருந்திய கணவனை கட்டையால் தாக்கி கொலை செய்த மனைவியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மீனாட்சி நகரில் வசித்து வந்தவர் வெங்கடேசன். இவரும் இவரது மனைவி உமாதேவியும் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெங்கடேசனுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்துள்ளார். நாளடைவில் மதுப் பழக்கத்திற்கு அடிமையான அவர், வீட்டில் இருந்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக விற்று மது அருந்தி வந்ததாகத் தெரிகிறது.
கடந்த 17ஆம் தேதி வெங்க டேசன் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததாக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் உயிரிழந்ததையடுத்து, அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெங்கடேஷ் கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
மனைவி உமாதேவி மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில், கணவரை கட்டையால் தாக்கியதை ஒப்புக்கொண்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த மிக்ஸி காணாமல் போனது குறித்து உமாதேவி கேட்டதற்கு, அதனை விற்று மது வாங்கி குடித்ததாக வெங்கடேசன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உமாதேவி கட்டையால் வெங்கடேசனைத் தாக்கியுள்ளார். விபத்து ஏற்பட்டதாக அருகில் இருந்தவர்களையும் நம்ப வைத்து வெங்கடேசனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். கணவரைக் கொன்று நாடகமாடிய உமாதேவியை பல்லடம் காவல்துறையினர் கைது செய்தனர்.