கோலாலம்பூர்: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மலேசியாவில் இன்று உரையாற்றவிருந்த ஒரு நிகழ்ச்சி திடீரென்று ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய-இந்திய பாரம்பரியக் குழுவின் சார்பில், இன்று நடக்கவிருந்த அந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் நடித்திருந்த ‘பெரியார்’ திரைப்படத்தை திரையிடவும் திட்டமிடப்பட்டிருந்தது.
அந்தப் படத்தை திரையிடுவதற்கு முன்பாக, ‘பெரியாரின் மலேசியப் பயணமும் அதன் தாக்கமும்’ என்ற தலைப்பில் கி.வீரமணி உரை நிகழ்த்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்து மதம் குறித்தும் இந்துக் கடவுள்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடிய அவரை மலேசியாவில் உரையாற்ற அனுமதிக்கக் கூடாது என, அந்த நாட்டில் உள்ள இந்து அமைப்புகளின் ஒரு தரப்பு மலேசிய உள்துறை அமைச்சுக்கு கோரிக்கை விடுத்ததாகவும் அதன் தொடர்ச்சியாக கி.வீரமணி பங்கேற்கவுள்ள நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களிடம் மலேசிய உள்துறை அமைச்சு அறிவுறுத்தியதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் இடம்பெற்றது.