சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று கூடுகிறது என்றும் அதில் 5,000 பேர் பங்கெடுக்கிறார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதிமுகவின் இரும்புத் தலைவியாக இருந்த ஜெயலலிதா மறைந்த பின் கட்சியின் பொதுக்குழு கூட்டம் 2016 டிசம்பர் 29ஆம் தேதி நடந்தது. அதில் கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிறகு ஏராளமான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன.
அதிமுக இரண்டாகி பிறகு ஒன்றாக ஐக்கியமானது. அதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது.
அந்தக் கூட்டத்தில் சசிகலா, டிடிவி தினகரன் நீக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கே பொதுச் செயலாளர் பதவி நிரந்தரமாக வழங்கப்பட்டது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி ஏற்படுத்தப்பட்டது. ஓ. பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிசாமி துணை ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பெடுத்தனர்.
கட்சியின் சின்னம், கொடி எல்லாம் மீட்கப்பட்டன. சென்ற ஆண்டு கஜா புயலும் சேர்ந்துகெண்டதால் பொதுக்குழு கூட்டம் சென்ற ஆண்டில் நடக்கவில்லை. இந்த ஆண்டு பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வானகரத்தில் இன்று நடக்கிறது.
முதலில் நடக்கும் செயற்குழு கூட்டத்தில் 380 பேருக்கும் அதிக பிரமுகர்கள் கூடுகிறார்கள். பிறகு நடக்கும் பொதுக் குழு கூட்டத்தில் 5,000 பேர் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கூட்டங்களில் முக்கியமான பல அம்சங்கள் பற்றி விவாதிக்கப்படும் என்றும் அழைப்பு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கட்சி அறிவித்து உள்ளது. இந்தக் கூட்டம் முக்கியமானதாக இருக்கும் என்று அனுமானிக்கப்படுகிறது.