பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டத்தில் எட்டு பெண்களிடம் பழகி ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் தனித்தனியாக குடும்பம் நடத்தி வந்த 23 வயது ஆடவரை போலிஸ் கைதுசெய்துள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூரைச் சேர்ந்த சந்தோஷ் என்ற அந்த ஆடவர், இளம் வயதில் இத்தனை பெண்களை ஏமாற்றி மணம் புரிந்து குடும்பம் நடத்தியது எப்படி என்பதை நினைத்து போலிஸ் அதிகாரி களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூரில் பனியன் ஆலை ஒன்றில் வேலை பார்த்த சந்தோஷ், ஐந்து மாதங்களுக்கு முன் சத்யா என்ற கருவிழிக்காடு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணை மணம் புரிந்து திருப்பூரில் வாடகை வீட்டில் குடியேறினார்.
சுமார் 40 நாட்களுக்கு முன் சந்தோஷ், திடீரென்று காணாமல் போய்விட்டார். மனைவி சத்யா போலிசில் புகார் தெரிவித்தார்.
புலன்விசாரணை நடத்திய போலிசார், சந்தோஷ் தன் சொந்த ஊரான கீழையூரில் இருக்கிறார் என்பதைக் கண்டுகொண்டு சத்யாவையும் அழைத்துக்கொண்டு அங்கு சென்றனர். சசிகலா என்ற 19 வயதுப் பெண்ணுடன் சந்தோஷ் அங்கு குடும்பம் நடத்திக்கொண்டிருந்தது தெரியவந்தது.
போலிசாரும் சத்யாவும் சென்ற நேரத்தில் சந்தோஷ் வீட்டில் இல்லாததால் தந்திரமாக அவரை வரவழைத்து போலிஸ் அதிகாரிகள் அவரை மடக்கினர்.
பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முன்னிலையான சந்தோஷ், பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விசாரித்தபோது அவர் இது போல் மொத்தம் எட்டு பெண்களை ஏமாற்றி அவர்களுடன் தனித் தனியாகக் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார் என்பது தெரியவந்தது. விசாரணை தொடர்கிறது.