சென்னை: மிகவும் ஆபத்தான வகையில் ‘பைக் ரேஸ்’ என்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இளைஞர்கள் மீண்டும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சாலைகளில் அவர்கள் கண்ணுமண்ணு தெரியாமல் செல்வதால் பொதுமக்களின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று சமூக நல ஆர்வலர்கள் புகார் கூறி உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேக மாகப் பரவி வருகின்றன.
இந்தப் பந்தயம் தொடர்பாக போலிசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை ஈசிஆர் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொழுதுபோக்கிற்காக இரவு நேரங்களில் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் ஒருகட்டத்தில் அதற்கு அடிமையாகும் சூழல் ஏற்படுகிறது. பணம் வைத்து விளையாடும் அளவிற்கு ஆர்வம் அவர்களைத் தொற்றிக்கொள்கிறது. இது சில சமயங்களில் உயிரைப் பறிக்கும் வகையில் சென்றுவிடுகிறது.
இதுபோல் சென்னை ஈசிஆர் சாலையில் இரவு நேரங்களில் இளைஞர்கள் அடிக்கடி பைக் ரேஸில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் மீதும் அவர்களது பெற்றோர் மீதும் போலிசார் வழக்கு பதிந்தனர்.
அதன்பிறகு குறைந்திருந்த பைக் ரேஸ் சம்பவங்கள் இப்போது மீண்டும் சென்னையில் தலைதூக்கத் தொடங்கியுள்ளன.