சென்னை: தமிழ்நாட்டில் நடுக்குவாதம் நோய்க்கு (Parkinson’s disease) சிகிச்சை அளிக்கும் புதிய நெறிமுறை சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் வரும் ஜனவரியில் தொடங்குகிறது.
இதன் தொடர்பில் பிரிட்டனைச் சேர்ந்த கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையின் நரம்பியல் வல்லுநர்கள் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் தமிழ்நாட்டின் சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கரை சந்தித்து பேச்சு நடத்தினர்.
நடுக்குவாத நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான நெறிமுறைகள் தொடர்பில் புரிந்துணர்வு குறிப்பு கையெழுத்திடப்பட்டுள்ளது.
அதன்படி, லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த வல்லுநர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள்.
“நடுக்குவாத நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான நெறிமுறைகளைத் தொடங்க நாங்கள் திட்டமிடுகிறோம். அநேகமாக இந்த நடைமுறை வரும் ஜனவரியில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கப்படும்.
“இதன் தொடர்பில் லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த குழுவினருடன் நாங்கள் பூர்வாங்க சந்திப்பு நடத்தி இருக்கிறோம். கடந்த 15 ஆண்டு காலமாக பிரிட்டன் வல்லுநர்கள் பின்பற்றி வருகின்ற சிகிச்சை முறைகளை எங்களுக்கு அவர்கள் விளக்கினார்கள்,” என்று தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் வல்லுநர்கள் குழு ஜனவரி முதல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும். புதிய நெறிமுறைகளைப் பின்பற்றி அந்த வல்லுநர்கள் தமிழக நரம்பியல் வல்லுநர்களுக்குப் பயிற்சியும் அளிப்பர்.
பிரிட்டனில் இத்தகைய நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அதே மருந்து தமிழ்நாட்டிலும் பயன்படுத்தப்படும். இருந்தாலும் இங்குள்ள சூழலுக்கு ஏற்ப மாறுதல்களும் இடம்பெறும் என்று அந்தச் செயலாளர் விளக்கினார்.
ராஜீவ்காந்தி மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு மருத்துவரும் ஒரு சில தாதியர்களும் சில நாட்களுக்கு முன் ஹைதராபாத் நகருக்கு அனுப்பப்பட்டனர். அங்கு பிரிட்டிஷ் வல்லுநர்கள் குழு அளிக்கும் பயிற்சியில் அவர்கள் கலந்துகொண்டு வருகிறார்கள்.
ராஜீவ்காந்தி மருத்துவமனை ஒவ்வொரு வாரமும் சுமார் 400 நடுக்குவாத நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கிறது.