சென்னை: தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர் 41 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாநிலத்திற்குத் திரும்பி தன்னுடைய தாயாரை முதன்முதலாக சந்தித்த நிகழ்ச்சி தாய்-மகன் பாசப் பிணைப்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.
சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 1976 ஆகஸ்ட் 3ஆம் தேதி தனலட்சுமி, கலியமூர்த்தி என்ற தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
அந்தத் தம்பதியர் பரம ஏழைகள் என்பதால் பல்லாவரத்தில் இருந்த ஒரு விடுதியில் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் தங்க வைத்து தாயார் தனலட்சுமியும் அங்கேயே தங்கியிருந்தார்.
ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு தனலட்சுமியை விடுதியில் இருந்து வெளியேற்றிவிட்டார்கள். தன் கணவருடன் வேறு இடத்துக்குச் சென்ற தனலட்சுமி, திரும்பி வந்தபோது அந்த விடுதியில் அவரின் பிள்ளைகளைக் காணவில்லை. டென்மார்க்கைச் சேர்ந்த தம்பதிகளுக்குப் பிள்ளைகள் இரண்டையும் தத்துகொடுத்துவிட்டதாக விடுதியினர் கூறிவிட்டனர். பிறகு அந்த விடுதியும் 1990ல் மூடப்பட்டுவிட்டது.
இந்நிலையில், தனலட்சுமியின் இரண்டு பிள்ளைகளும் டென்மார்க்கில் வளர்ந்து வந்தனர். அந்த இரண்டு பிள்ளைகளில் டேவிட் என்பவருக்கு இப்போது வயது 43.
இவரிடம் ஒரு கருப்பு வெள்ளை புகைப்படம் மட்டும் இருந்தது. அந்தப் படம் பல்லாவரம் விடுதியில் எடுக்கப்பட்டது. தன்னுடைய தாயாரின் அரவணைப்பில் டேவிட் கைப்பிள்ளையாக இருந்ததை அந்தப் படம் காட்டியது. டேவிட் முதலில் அரும்பாடுபட்டு தன்னுடைய அண்ணனை டென்மார்க்கில் கண்டுபிடித்தார்.
மார்ட்டின் மேனுவல் ராஸ்மூஷன் என்ற அந்தச் சகோதரர் டென் மார்க்கில் இப்போது வசதியாக இருக்கிறார். டேவிட் தன்னுடைய பெற்றோர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மிகுதியில் பல முயற்சிகளை மேற்கொண்டார்.
இப்போது பங்குத் தரகராக வசதியான வாழ்க்கை நடத்தும் டேவிட், 2017ல் முதன்முதலாக இந்தியாவுக்கு வந்து, காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து தருவதில் வல்லுநர்களான அஞ்சலி பவார், அருண் டோல் என்ற இரண்டு பேரை சந்தித்தார்.
இவர்களின் உதவியுடன் பல முயற்சிகளை எடுத்தும் முடியாமல் போனதால் நாடு திரும்பிவிட்டார். பிறகு இம்மாதம் திரும்பி வந்து சென்னை மணலியில் ஓட்டுவீடு ஒன்றில் வசித்து வரும் தன்னுடைய 68 வயது தாயாரை சந்தித்தார்.
இருவரும் சந்தித்துக்கொண்டது பலரின் மனதையும் நெகிழச் செய்த பாச வெளிப்பாடாக அமைந்தது.
டேவிட்டின் தந்தை ஏற்கெனவே காலமாகிவிட்டார். தாயார் வீட்டு வேலை செய்துவருகிறார்.