சென்னை: இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் அனைத்துலகத் திரைப்பட விழா கோவா தலைநகர் பனாஜியில் கடந்த 20ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இவ்விழாவில் சுமார் 200 நாடுகளில் இருந்து பிரதிநிதிகளும் 12,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த விழாவில் தமிழக அரசின் சார்பில் செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு பேசுகையில், “தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்த வரும் உலக திரைப்பட படைப்பாளிகளுக்கு படப்பிடிப்பு வசதிகளை செய்து தர அரசு எப்போதும் தயாராக இருக்கிறது.
“சென்னை திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்து சென்னையை உலக திரைப்பட விழாக்களின் சந்தையாக தமிழக அரசு மாற்றியுள்ளது. விரைவில், ‘தமிழ்நாடு பிலிம் பெசிலிடேஷன்’ மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
“சென்னை அருகே பையனூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் பிரம்மாண்ட சினிமா படப்பிடிப்புத் தளம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படங்களுக்கு எளிதில் மானியம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது,” என்று கூறினார்.