நோட்டமிட்டு, போலி சாவி தயாரித்து உறவினர் வீடுகளிலேயே நகை, பணம் திருடிய காதல் ஜோடியை போலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னை போரூரை அடுத்த காரப்பாக்கம், செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்த ஜெகதீஷ் பாண்டியன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு வழக்கமாக வைக்கும் இடத்தில் சாவியை வைத்துவிட்டு வேலைக்குச் சென்றார்.
வீடு திரும்பிய அவர், வீட்டில் இருந்த ஐந்து சவரன் நகை, பணம் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீடு பூட்டி இருந்த நிலையில் நிகழ்ந்த திருட்டு குறித்து அவர் போலிசில் புகார் அளித்தார்.
அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலிசார் ஓர் ஆணும், பெண்ணும் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்றுவிட்டு, சிறிது நேரம் கழித்து வெளியே வருவது போன்ற காட்சிகளைக் கண்டனர்.
காணொளியில் காணப்பட்ட இளையர் தம்முடைய உறவினர்தான் என்று ஜெகதீஷ் பாண்டியன் தெரிவித்ததும் போலிசார் விரைந்து நடவடிக்கையில் இறங்கினர்.
கோயம்பேட்டைச் சேர்ந்த 24 வயது கார்த்திக், அவருடைய காதலியான 24 வயது நித்யா ஆகிய இருவரையும் கைது செய்த போலிசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
கார்த்திக், நித்யா இருவரும் பொறியியற்கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து வந்தனர். படிப்பை முடித்த கார்த்திக் சொந்தமாகத் தொழில் நடத்தி வந்தார். நித்யா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கார்த்திக்கிற்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. பாட்டியின் கட்டுப்பாட்டில் வளர்ந்து வந்த நித்யாவுக்கு போதிய வருமானம் இல்லை.
அதனையடுத்து, வீட்டின் பூட்டை உடைக்காமல் திருடத் திட்டமிட்ட அவர்கள், உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது அங்குள்ள அறைகளையும், வெளியில் செல்லும்போது அவர்கள் சாவியை எங்கே வைக்கிறார்கள் என்பதையும் கண்காணித்தனர்.
பின்னர் போலி சாவியைத் தயாரித்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திருட்டை அரங்கேற்றி வந்துள்ளனர். இவர்கள் அடிக்கடி அந்த உறவினர்கள் வீடுகளுக்கு வந்து செல்வதால் அக்கம் பக்கத்தினர் யாருக்கும் இருவர் மீதும் சந்தேகம் ஏற்படவில்லை.
இதுபோல பல உறவினர் வீடுகளில் இவர்கள் கைவரிசை காட்டி உள்ளதாக போலிசார் குறிப்பிட்டனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity