சென்னை: வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான கார்த்திக், நித்யா இருவரும் பொறியியல் கல்லூரியில் படித்தபோது காதல் வயப்பட்டுள்ளனர். படிப்பை முடித்ததும் சொந்தமாக தொழில் நடத்தி வந்துள்ளார் கார்த்திக். காதலி நித்யா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார்.
இந்நிலையில் தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டதால் கார்த்திக் தவிக்க, அவருக்கு உதவி செய்யும் அளவுக்கு வருமானம் இல்லாததால் நித்யாவும் வருந்தி உள்ளார்.
இதையடுத்து இருவரும் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது உறவினர்களின் வீடுகளில் நூதன முறையில் கொள்ளையடிக்கும் யோசனை வந்துள்ளது.
வீட்டின் பூட்டை உடைக்காமலும் காவல்துறையிடம் சிக்காமலும் கொள்ளையடிக்கத் திட்டம்தீட்டினர். அப்போதுதான் போலி திறவுகோல்கள் தயாரித்து கைவரிசை காட்டலாம் என கார்த்திக் கூறியுள்ளார். அதன்படி சென்னையில் உள்ள உறவினர்களிடம் நலம் விசாரிக்கும் போர்வையில் இருவரும் பலரைச் சந்தித்துள்ளனர். அப்போது வீட்டில் உள்ள அறைகளை நோட்டமிட்டுள்ளனர்.
மேலும், உறவினர்கள் வெளியே செல்லும்போது கதவுத் திறவுகோல்களை வைக்கும் இடம், நகைகள், ரொக்கப்பணம் இருக்கும் அறை அனைத்தையும் கவனித்துள்ளனர்.
பின்னர் உறவினர் வீட்டுத் திறவுகோல்களைப் போலவே மாற்றுத் திறவுகோல்கள் தயாரித்து தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர் இந்தக் காதலர்கள்.
மாற்றுத் திறவுகோல்கள் தயாரானதும் உறவினர்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் உள்ளே நுழைந்து பணம், நகைகளைத் திருடுவது இவர்களது வாடிக்கை.
இந்நிலையில், சென்னை, காரப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் பாண்டியன் (36 வயது) என்ற உறவினர் வீட்டிலும் நுழைந்து 5 பவுன் நகைகளை இந்தக் காதலர்கள் திருடியுள்ளனர்.
இதுகுறித்து போலிசில் ஜெகதீஷ் பாண்டியன் புகார் அளித்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்புப் புகைப்படக்கருவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, கார்த்திக்கும் நித்யாவும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாற்றுத் திறவுகோல்கள் தயாரித்து உள்ளே நுழைவதும், சில நிமிடங்களில் வெளியேறுவதும் பதிவாகி இருந்தது.
இதையடுத்து காதலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.