சேலம்: விபத்தில் துண்டிக்கப்பட்ட சிறுவனின் கை அறுவைச் சிகிச்சை மூலம் மீண்டும் இணைக்கப்பட்டது. சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் இந்தச் சாதனையைப் பலரும் பாராட்டி உள்ளனர்.
அண்மையில் சேலம் மாவட்டம் கந்தப்பட்டியில் மிதிவண்டிக் கடையில் இருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியது. அப்போது அதன் ஒரு பகுதி கடைக்கு அருகே உள்ள ராமன் என்பவரின் ஓட்டு வீட்டின் மேல் கூரையை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் விழுந்தது.
வீட்டில் இருந்த அவரது 11 வயது மகன் மவுலீஸ்வரனின் கையில் சிலிண்டர் தகடு விழுந்ததில் சிறுவனின் மணிக்கட்டுக்குக் கீழே கை துண்டிக்கப்பட்டது. மேலும் தொடை எலும்பும் முறிந்தது. இதையடுத்து துண்டிக்கப்பட்ட கையைப் பத்திரமாக ஓர் உறையில் சுற்றி ஐஸ்பெட்டிக்குள் வைத்து மகன் மவுலீஸ்வரனோடு விரைந்தார் தந்தை ராமன்.
அங்கு பணியில் இருந்த மருத்துவர் ராஜேந்திரன் தலைமையிலான 20 பேர் கொண்ட மருத்துவக் குழுவானது சுமார் 6 மணி நேரம் மேற்கொண்ட அறுவைச் சிகிச்சையின் பலனாக சிறுவனின் துண்டிக்கப்பட்ட கை மீண்டும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
மேலும் விபத்து காரணமாக துண்டிக்கப்பட்ட 26 நரம்புகளும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாகத் தெரிவித்த மருத்துவர் ராஜேந்திரன், இத்தகைய ஒட்டு (இணைப்பு) அறுவைச் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என்றார்.
சிறுவன் மெளலீஸ்வரனுக்கு முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இச்சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.