சென்னை: தமிழகம் முழுவதும் கிராமத்திற்கு 12 ஹெக்டேர் அளவுக்கு சாகுபடியை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான சிறப்புத் திட்டம் அறிவிக்கப்படும் என அரசுத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ சரிவிகிதத்தில் சத்தான உணவு சாப்பிட வேண்டும். அதற்கு அன்றாடம் 300 கிராம் காய்கறிகள், 100 கிராம் பழங்கள் சாப்பிட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
கிராம மக்கள் அனைவருக்கும் காய்கறிகளும் பழங்களும் எளிதாகவும், விலை குறைவாகவும் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் அடுத்த ஓராண்டில் கூடுதலாக 10 ஹெக்டேரில் காய்கறியும், 2 ஹெக்டேரில் பழங்களும் சாகுபடி செய்ய மாநிலத் தோட்டக்கலைத்துறைக்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது காய்கறிகள் 2 லட்சத்து 20 ஹெக்டேரிலும், பழங்கள் 2,84,000 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படுவதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.