காஞ்சிபுரம்: தனது மாற்றுத்திறனாளி மகளை கடந்த 18 ஆண்டுகளாக இடுப்பில் சுமந்தபடியே பள்ளிக்கு அழைத்துச் சென்று பின்பு வீட்டுக்கு கூட்டிச் செல்கிறார் தாய் ஒருவர்.
இந்தத் தாயை தமிழக மக்கள் பலரும் பாாராட்டி வருகின்றனர்.
தாயின் அன்றாட சிரமத்தைக் குறைக்க அவரது மகளுக்கு உதவித் தொகையும் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் வழங்கப்படவுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திர மேரூரை அடுத்த பெருங்கோழி மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி.
இவருக்கு பிறக்கும்போதே இரு கால்களும் ஊனமான நிலையில் மகள் திவ்யா பிறந்தார்.
இதற்கிடையே பத்மாவதியும் அவரது கணவர் சரவணனும் பிரிந்துவிட்ட நிலையில், பத்மாவதி கூலி வேலைக்குச் சென்று தனது மகளைக் காப்பாற்றி வருகிறார்.
தற்போது உத்திரமேரூர் மேல்நிலைப் பள்ளியில் ‘பிளஸ் டூ’ படித்துவருகிறார் 18 வயது திவ்யா.
கல்வியில் சிறந்த விளங்கும் திவ்யாவை அவரது தாயார் பத்மாவதி தற்போதும் தங்கள் கிராமத்தில் இருந்து 2 கி.மீ. தூரம் இடுப்பில் சுமந்தபடி சென்று அரசுப் பேருந்தைப் பிடித்து உத்திரமேரூருக்கு அழைத்து வருகிறார்.
அதன்பின்னர் மீண்டும் மாலையில் மகளைத் தூக்கிக்கொண்டு பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து வீட்டுக்குச் செல்கிறார்.
இதுகுறித்து உத்திரமேரூர் வட்டாட்சியர் பவானி கூறுகையில், “மாணவி திவ்யாவுக்கு ஏற்கெனவே உதவித் தொகைக்கான உத்தரவு வழங்கப்பட்டுவிட்டது. மாற்றுத்திற னாளிகள் அலுவலகம் மூலம் அவருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் வழங்கப்பட உள்ளது,” என்றார்.